Published Date: December 3, 2025
CATEGORY: FEDERALISM

சென்னை: ‛‛6.5 கோடி வாக்காளர்கள் கொண்ட வாக்காளர் பட்டியலை ஒரு மாதத்தில் திருத்துவது என்பது சாத்தியமில்லை. அந்த வகையில் இது மீண்டும் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பா அல்லது வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் முயற்சியா என்று நாங்கள் கவலைப்படுகிறோம். குறிப்பாக பொருளாதார ரீதியாக மிக ஏழைகளா, பலவீனமானவர்களாக, ஊடகம் அல்லது டிஜிட்டல் அமைப்புகளுடன் மிகக் குறைந்த தொடர்பில் உள்ளவர்கள் தான் வாக்குரிமையை பறிகொடுக்கும் அபாயம் உள்ளது'' என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. இதற்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அதுமட்டுமின்றி தற்போதைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு செவி சாய்த்துள்ளது. இப்படியான சூழலில் தான் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கி உள்ளார்.
பி.டி.ஆர். இண்டர்வியூ:
‛தி வயர்' எனும் செய்தி சேனலுக்கு பத்திரிகையாளர் கரண் தாபருக்கு பேட்டியளித்தார். அப்போது, ‛‛தமிழ்நாட்டை ஆளும் திமுக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் திமுகவின் முக்கிய கவலைகள் என்ன? ‛சார்' நடைமுறை ஜனநாயக விரோதமானது, மாநில மக்களின் நலன்களுக்கு எதிரானது என்று கூறுவது சரியா?, உச்சநீதிமன்றத்திடம் இருந்து நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எந்த அளவுக்கு நம்பிக்கை உள்ளது?'' என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‛‛நான் எப்போதும் சொல்வது என்னவென்றால், ஒரு விஷயத்தை பற்றி கவலைகள் இருக்கும்போது, அவற்றை எப்போதும் அதன் பின்னணியுடன் சேர்த்து தான் பார்க்க வேண்டும். அதனால் இப்போது இதன் பின்னணியை கூறிவிட்டு அதுபற்றி விரிவாக கூறுகிறேன். முதன்மையான விஷயம் என்னவென்றால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செல்பாடின்மையும், கடந்த சில ஆண்டுகளாள அதன் சுதந்திரத்தின் மீது மென்மேலும் ஏற்பட்டு வரும் சிதைவும் தான். மேலோட்டமாக பார்க்கும்போது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எப்போதும் நம்பகத்தன்மையை அளிப்பதாக இல்லை.
2வது - 3வது பிரச்சனை:
இரண்டாவதாக பீகாரில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும், அவர்கள் குறிவைத்து நீக்கப்பட்டவை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளும் எங்கள் கவலையை இன்னும் ஆழப்படுத்துகின்றன. மூன்றாவது மற்றம் மிக முக்கியமானது என்னவென்றால் இந்த நடைமுறையானது செயல்படுத்தப்படும் காலம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்படுவதற்கு 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. அப்படியிருக்கும்போது சுமார் 6.5 கோடி வாக்காளர்கள் கொண்ட பட்டியலை திருத்த வேண்டிய வேலையின் அளவை பார்த்தால் இந்த காலக்கெடு சரியானதாக தெரியவில்லை. இந்த குறுகிய கால இடைவெளியில் இப்பணியை செய்து முடிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை.
அந்த வகையில் இது மீண்டும் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பா அல்லது வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் முயற்சியா என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.
ஒப்பீட்டளவில் சிரமம்:
இந்த செயல்முறையின் தொடக்கமே ஒவ்வொரு வாக்காளரையும் சரிபார்க்க வேண்டும் என்பதாகும் இல்லையா.. அதுதான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம். பலரும் வாதிடுவது போல் SIR ஆனது இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளது. இதனால் ‛சார் நடவடிக்கை நடப்பது இது முதல் முறை இல்லை. கடைசி முறையாகவும் இருக்காது. ஆனால் செயல்முறையை மட்டும் விவரிக்க வேண்டுமானால் 6.5 கோடி மக்களுக்காக படிவங்கள் அச்சிடப்பட வேண்டும். இந்த படிவங்கள் தனிநபர்களின் வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, இந்த பட்டியலில் உள்ளவர்கள் அந்த வீட்டில் வசிக்கிறார்களா என்று சரிபார்க்கப்பட வேண்டும்.
பின்னர் நீங்கள் எந்த வகை வாக்காளர் மற்றும் சில அளவுகோல்களின் கீழ் உங்களின் தகுதிகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். இது ஒப்பீட்டளவில் எளிதான செயல்முறையாகவோ அல்லது ஒப்பீட்டளவில் சிக்கலான செயல்முறையாகவோ இருக்கலாம். இவை அனைத்தும் பகுதிநேர அடிப்படையில் இந்த சீராய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடைநிலை அரசு ஊழியர்களின் மேற்பார்வையில் 30 நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். அவர்ளுக்கு தங்கள் வழக்கமான முழுநேர வேலையில் இருந்து எந்த விடுப்பும் அளிக்கப்படுவது இல்லை. ஆகையால் ஆயிரம் வாக்காளர்களின் படிவங்களை சரிபார்க்க ஒரேயோரு பணியாளர் என்ற விகிதம் உள்ளது.
எளிதான காரியம் அல்ல:
இப்போது தமிழ்நாட்டில் சராசரி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் மூன்றையொட்டியே உள்ளது. அதில், நீங்கள் குழந்தைகளை நீக்கினால் ஒரு வீட்டிற்கு சுமார் 2 வாக்காளர்களுக்கும் குறைவாகவே இருக்கும். எனவே இப்பொழுது ஆயிரம் வாக்காளர்களை சந்திக்க வேண்டுமானால் இந்த பணியாளர்கள் 400 வீடுகளுக்கு செல்ல வேண்டும். அவர்கள் அங்கே இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
நீங்கள் 3 முறை செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தால் ஒப்பீட்டளவில் சரிமமான அந்த செயல்முறையினை செய்ய வேண்டும். நீங்கள் ஒரு புதிய புகைப்படம் வைத்திருக்க வேண்டும். சில ஆவணங்களை காட்ட வேண்டும். அந்த படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இவையெல்லாம் எளிதானது அல்ல. படிவங்களை நிரப்ப நீங்கள் எந்த வகை வாக்காளர் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பயிற்சி போதுமானதாக இல்லை:
நீங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் நீங்கள் இடம்பெற்றிருந்தீர்களா என்பதை சரிபார்க்க வேண்டும். அதாவது இதற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நகர்புற பகுதிகளில் அது 2005ல் செய்யப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் கடைசியாக 2002ல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனால் ஒரு அரசு பணியாளரை கொண்டு ஆயிரம் வாக்காளர்கள், அதாவது சுமார் 400 வீடுகளில் வாக்காளர் திருத்த பணிகளை குறுகிய கால அவகாசத்தில் பகுதி நேர அடிப்டையில் செய்ய வேண்டியது மிகவும் சிரமானதாகும்.
அதுமட்டுமின்றி இது மேலும் இரண்டு பிரச்சனைகளும் உள்ளது. அதாவது செயல்முறை அறிவிக்கப்பட்ட பிறகு தான் படிவங்கள் அச்சிடும் பணி தொடங்குகிறது. இந்த செயல்முறையானது தொடங்கும் வரை படிவங்கள் அச்சிடப்படவில்லை. நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு தான் படிவங்கள் விநியோகிகப்படுவதை பார்க்கிறோம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையமானது 90 சதவீத படிவங்களை வாக்குச்சாவடிஅலுவலர்களிடம் ஒப்படைத்துவிட்டடதாக கூறுகிறது. அதேபோல் பிஎல்ஓக்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி போதுமானதாக இல்லை.
கணினியில் பதிவேற்ற முடியவில்லை:
3வது பிரச்சனை நிர்வாக பின்னணியில் உள்ளது. வாக்காளர்கள் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெற்ற பிறகு மீண்டும் தேர்தல் ஆணையத்தின் கணினி அமைப்புக்குள் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால் அந்த செயல்முறை இப்போது பலவிதமான புதிய சிக்கல்களை கொண்டிருக்கிறது. சர்வர்கள் செயலிழக்கின்றன. அவர்களால் விரும்பியபடி தரவை பதிவேற்ற முடியவில்லை. இந்த செயல்முறை தள்ளாடி கொண்டிருக்கிறது.
என் தொகுதியில் 12 சதவீதம் வாக்கார்களின் தரவுகள் மட்டுமே கணினி அமைப்புக்குள் பதிவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் 90 சதவீதம் விநியோகிக்கப்பட்டு விட்டதாக கூறினாலும் பிஎல்ஓ கைகளில் இன்னும் 70 சதவீத படிவங்கள் இருக்கின்றன. இந்தசெயல்முறை நிறைவடைவதற்கு இன்னும் 12 அல்லது 13 நாட்கள் தான் இருக்கின்றன. இவையல்லாம் தான் எங்கள் கவலைகள்.
ஜனநாயகத்துக்கு விரோதமானது:
என்னை பொறுத்தவரை மற்ற எவரையும் விட பல்வேறு காணங்களுக்காக இந்த விஷயத்தில் தேர்தல் செயல்பாட்டு அமைப்பு மற்றும் அதன் பகுப்பாய்வுகளில் அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். 12பக்கத்தில் கட்டுரை எழுதியிருக்கிறேன். தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பக்க சார்பு நடவடிக்கையை கடுமையான குறைபாடுகளையும் நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். வாக்காளர் பட்டியல் சரிபார்க்க பட வேண்டுமா என்றால், ஆம்,கண்டிப்பாக சரிபார்க்கப்பட வண்டும். அதை செய்வதற்கு இது சரியான தருணமா என்றால் நிச்சயமாக இல்லை. மூன்று அல்லது 4 மாதத்தில் தேர்தல் வர உள்ளது. நமக்கு நேரம் குறைவாக உள்ளது. இவ்வளவு குறைந்த நேரத்தில் இத்தனை அதிகமான வாக்காளர்களை கையாள்வதற்கு அந்த செயல்முறை போதுமான திறனுடன் இல்லாததால் வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட வாய்ப்புள்ளது.
இன்னும் ஒருபடி மேலே கூறுகிறேன். ஏன் இது ஜனநாயகத்துக்கு விரோதமானது வாக்களிக்கும் உரிமை என்பது ஜனநாயகத்தில் எந்தவொரு குடிமகனுக்கும் உள்ள முக்கிய உரிமையாகும். ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்ற கருத்தாக்கம் ஜனநாயகத்தின் அடிநாதமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் நீங்கள் அவர்களிடம் இருந்து வாக்களிக்கும் உரிமையை பறித்தால் அது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அந்த உரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்று நாங்கள் கூறுவதற்கு அடிப்படை உள்ளது. ஒருவர் தங்கள் படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பித்து அது பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்வது என்பது கல்வி, பொருளாதார வசதி, அதிகார தொடர்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவை கொண்டவர்களால் மட்டுமே சாத்தியமான செயல்பாடாகும்.
ஏழைகள் தான் விடுபடுவார்கள்:
ஆனால் அதற்கு மாறாக இந்த செயல்பாடுகளினால் விடுபட்டு போககூடியவர்கள் யாரென்றால் நான் என்னுடைய தொகுதியில் கவனித்த போது பொருளாதார ரீதியாக மிக ஏழைகளா, பலவீனமானவர்களாக , ஊடகம் அல்லது டிஜிட்டல் அமைப்புகளுடன் மிகக் குறைந்த தொடர்பில் உள்ளவர்கள் தான். எனவே அவர்கள் வேறு எங்கும் வேலைக்கு சென்றுவிடடாமல் வாக்குச்சாவடி அலுவலர் வரும் நேரத்தில் வீட்டில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே இந்த செயல்மறையானது வசதி படைத்த கல்வி அறிவு கொண்ட பொதுவெளி தொடர்பு கொண்டவர்களுக்கு பட்டியலில் சேர அதிக வாய்ப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதன்மூலமாக இந்த வசதிகள் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. ஆகவே இது ஜனநாயகத்தினருக்கு எதிரானது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. மழையே இல்லாவிட்டாலும் இந்த செயல்முறையை 30 நாட்களில் முடிப்பது கடினமானது. சென்னை போன்ற இடங்களில் வருடாந்திர மழையளவில் சுமார் 80 சதவீத வடகிழக்கு பருவமழையில் தான் கிடைக்கிறது. எனவே இது இன்னும் பல சிக்கல்களை உருவாக்க கூடும். நாம் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லும் இந்த காலக்கட்டத்தில் இந்த படிவங்கள் அனைத்தும் காகிதத்தில் அச்சிடப்பட்டவை தான்.இந்த படிவங்கள் மழையால் சேதமடையும். எனவே இது ‛சார்' பணிக்கு உகந்த நேரம் இல்லை. என் கட்சி என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுபவன் நான். நான் எம்எல்ஏவாக களத்தில் இருக்கிறேன். எனது கருத்து பெரும்பாலும் செயலாக்கத்தில் உள்ள பிரச்சனையை பற்றியே இருக்கின்றன'' என்றார்.
Media: tamil.oneindia.com